புத்துயிர் பெறும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

முனைவர் ஜி. ஜான் சாமுவேல்
துணைத் தலைவர்
உலகத் தமிழாராய்ச்சி மன்றம்


26.07.2023 நாளிட்ட தினமணி நாளிதழில் சீர்குலைவில் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் என்ற தலைப்பில் மூத்த அரசியல்வாதி திரு. பழநெடுமாறன் எழுதிய கட்டுரையைப் படித்து மிகவும் வியப்படைந்தேன். தவறுகள் மலிந்த நடுவுநிலை தவறிய கட்டுரை என்ற முறையில் இக்கட்டுரையில் தரப்பட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டுவது உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர் என்ற முறையிலும், பதினொன்றாவது உலகத்தமிழ் மாநாட்டினை இம்மாதம் மிகச் சிறப்பான முறையில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் கனவை நிறைவேற்றிய நிறைவில் நடத்தித் தந்தவன் என்ற முறையிலும் எனது தலையாய கடமை என்று உணர்கிறேன்.

1964-ல் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு முற்போக்கான, நடுவுநிலை தவறாத தெளிவான பார்வையும், ஆராய்ச்சிக் கண்ணோட்டமும், தெளிந்த நோக்கமும், உலகளாவிய தமிழாய்வு குறித்த நல்ல தொலைநோக்கும் இருந்தன. இந்த அடிப்படையில் உலகத் தமிழ் என்னும் கருதுகோளை அவர் மிகத் தெளிவான வரையறையுடன் கட்டமைத்திருந்தார். தமிழாய்வை உயிர் மூச்சாகக் கொண்ட தாய்த் தமிழக அறிஞர்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழறிஞர்களையும், தமிழரல்லாத உலகத் தமிழ் அறிஞர்களையும் உள்ளடக்கிய ஒரு தெளிவான இறுக்கமான கோட்பாடாக அடிகளாரின் இந்த ஆய்வுக் கண்ணோட்டப் பரப்பு அமைந்திருந்தது என்பதை 1966-இல் நடந்த முதல் உலகத்தமிழ் மாநாடு பறைசாற்றியது.

சென்னையில் நடந்த இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது அரசு அல்லது மக்கள் சார்ந்த விடயங்களை உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது ஆய்வரங்கம், பொதுவரங்கம் எனப் பிரித்து ஆய்வையும், அரசியலையும், கேளிக்கைகளையும் தனித்தனியே இனங்கண்டு நடுவுநிலை தவறாத தமிழாய்வுக்கு முதலிடம் கொடுத்து அவர் தமிழாய்வின் தூய்மை கெடாது உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தினார்.

நல்ல அறிஞர்கள் இவ்வியக்கத்தை முன்னின்று நடத்துமாறு அவர் பார்த்துக் கொண்டார். அடிகளார் மறைந்த பின்பு அரசியலாளரும், வியாபாரிகளும் கொஞ்சங் கொஞ்சமாக இவ்வியக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.

மிகவும் கண்டிப்பான ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு காரஷிமா இந்த இயக்கத்தை 2010 வரை வழி நடத்தினார். ஆனால் சுயநலமும், வணிக நோக்கும் கொண்ட நமது அறிஞர்கள் சிலர் அவரைத் தாறுமாறாக விமர்சித்ததாலும் அவரது உள்ளத்தை நோகடித்ததாலும் அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை இந்து பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டு, நல்ல தமிழ்ப் பற்றுமிக்க அடுத்த தலைமுறையினர் இந்த அமைப்பை அதன் குறிக்கோள் கெடாதவாறு காப்பார்கள் என்ற எதிர்கால நம்பிக்கையுடன் இந்த அமைப்பை விட்டு வெளியேறினார். இதன் விளைவாக 2010 முதல் 2019 வரை இந்த அமைப்பு மிகக் கொடிய இருண்ட காலத்தைச் சந்தித்தது.

2015- இல் இதன் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு சிறு கூட்டம் அப்போது துணைத்தலைவராக இருந்த முனைவர். வா.செ. குழந்தைசாமியின் வீட்டில் கூடி யாருக்குமே தெரியாத, உலகளாவிய தமிழறிஞர் என்று இனங்காட்டவும் முடியாத முனைவர் மாரிமுத்து அவர்களை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக நியமித்தது. இந்த மனிதர் 9வது மாநாடு என்ற பெயரில் ஒரு விழாவினை மலேசிய நாட்டில் ஏற்பாடு செய்தார். இதைப் பிற நாடுகளில் வாழும் உலகத் தமிழர்கள் புறக்கணித்தனர்.

ஒவ்வொரு மாநாட்டின் இறுதியிலும் பொதுக்குழு கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது மரபு. இதற்குரிய விதியும் 1987 இல் நிறைவேற்றப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சட்ட விதிகளில் தெளிவு படுத்தப்பட்டது. அதன்படி முனைவர் மாரிமுத்து அவர்கள் 9வது உலகத் தமிழ் மாநாட்டின் இறுதியில் பொதுக்குழுவைக் கூட்டி தான் பதவி விலகி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தன்னை வாழ்நாள் தலைவர் என்று கருதி மாரிமுத்து பதவி விலகாமல் தொடர்ந்தார்.

10வது உலகத்தமிழ் மாநாடு சிகாகோவில் சட்டப்படி பொதுக்குழுவைக்கூட்டி முனைவர் பொன்னவைக்கோவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இந்தப் பொதுக்குழுவிற்கு முனைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். புதிய தலைவருக்கு வாழ்த்தும் கூறினார். இது என் கண்முன் நிகழ்ந்த நிகழ்ச்சி. இதன்பின்னர் தன் பதவிபறிபோனதை உணர்ந்து அவர் அதைத் தக்க வைப்பதற்காகத்தான் தான் தலைவர் என்று சொல்லித் திரிந்தார். புதிதாகப் பதவி ஏற்ற முனைவர் பொன்னவைக்கோவிடம் தமிழக அரசின் நல்கைத் தொகை முறையாக ஒப்படைக்கப்பட்டது.

தமிழறிஞரல்லாத முனைவர் மாரிமுத்துவின் பதவிப் பேராசையால் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதைத் தோற்றுவித்த அடிகளாரின் சீரிய தமிழாராய்ச்சிக் கனவுகளைச் சிதறிடிக்கும் முயற்சியில் முனைவர் மாரிமுத்து இறங்கினார். சட்டப்படி இயங்கும் பதிவு செய்யப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி மன்றம் சிங்கப்பூரில் 11ஆவது மாநாடு நடத்துவதாக அறிவித்தபோது புத்தக வியாபாரியும் கலைஞன் பதிப்பக உரிமையாளருமான, தமிழறிஞரல்லாத திரு.நந்தன் மாசிலாமணியை உலகத்தமிழ் ஆய்வு மன்றத்தின் பொதுச் செயலாளர் என்ற போர்வையில் சார்ஜாவில் தான் நடத்த திட்டமிட்டிருந்த மாநாட்டிற்கு நிதி வசூல் செய்ய அனுமதித்தார்.

அவர் கலைஞன் பதிப்பகக்தில் ரூ. 55,000/- மதிப்புள்ள நூல்கள் வாங்குவோருக்கு மாநாடு நடப்பதாக இருந்த சார்ஜா செல்ல விமானப் பயணச் சீட்டும், மாநாடு நடக்கும் நாட்களில் தினம் ரூ. 5000 தினப்படியும் வழங்கப்படும் என்று அனைவருக்கும் கடிதம் எழுதி வசூல் வேட்டையில் இறங்கினார்.

இந்நிலையில் பலமுறையும் இவர்கள் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் பெயரை (IATR) யும் 11ஆவது உலகத் தமிழ் மாநாடு என்ற நிலையினையும் பயன்படுத்துவது தவறு என்று காணொலி மூலம் அறிஞர்களுக்கு அறிவித்தோம். சிங்கப்பூரில் 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்ததால் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தில் ஜூலை 7,8,9 ஆகிய நாட்களில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் கனவு நிறைவேறும் வண்ணம் தலைமை சான்ற உலகளாவிய மாநாட்டினை அனைவரும் வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்தினோம். 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 210 அறிஞர்கள் இம்மாநாட்டில் உரையாற்றினர். தமிழின் பல்வேறு துறைகள் சார்ந்த 15 வல்லுனர்கள் சிறப்புரையாற்றினர். அரசியல் கலப்பில்லாமல், விரும்பத்தகாத ஆரவாரங்கள் இல்லாமல், சுத்தமான உலகுதழுவிய தமிழாய்வுகள் மிகச்சிறப்பாக இம்மாநாட்டில் நடந்தேறின. உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்ற விதிப்படி பொதுக்குழு கூட்டப் பெற்று புதிய ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். விதிகளை வகுத்து அவ்விதிகளைக் கண்ணெனப் போற்றிக் கடைப்பிடிக்கும் நிறுவனம்.

2019-இல் சிகாகோவில் நடைபெற்ற 10வது உலகத்தமிழ் மாநாடு தொடங்கி நிறுவுனர் தவத்திரு அடிகளாரின் எண்ணங்களை நிறைவேற்றும் நிலையில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆட்சியர்களின் வழிநடத்துதலை ஏற்று உலகளாவிய நிலையில் தமிழாய்வில் சாதனைகள் நிகழ்த்திய அறிஞர்களை ஆட்சிக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் செயல்பட்டு வருகின்றது.

சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதாக இருந்த மாநாட்டை, தலைவராக மாரிமுத்து செயல்பட்டபோது துணைத்தலைவரான பொன்னவைக்கோ தட்டிப் பறித்து சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் உதவியோடு நடத்தினார் என்று திரு.பழநெடுமாறன் குறை கூறுவது முற்றிலும் உண்மைக்கும் புறம்பானது.

முனைவர் மாரிமுத்து தலைமை வகித்த கூட்டத்தில் பொன்னவைக்கோவின் பெயர் முன்மொழியப்பட்டு அவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது முனைவர் மாரிமுத்து அதிர்ச்சியடைந்ததோடு இதை ஏற்க மறுத்தார் என்பதும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. ஏன் இவர் அதிர்ச்சியடைய வேண்டும்? “பழையன கழிதலும் புதியன புகுதலும்” தமிழ் இலக்கணம் மட்டுமன்று, மக்களாட்சியின் கோட்பாடு; இயற்கையின் நியதி. இது முனைவர் மாரிமுத்துவுக்கு தெரியாதா? இவர் இந்தப் பதவி நிரந்தரம் என்று கருதினாரா ?

நான் உலகளாவிய தமிழாய்வில் 40 ஆண்டுகளாகத் தொடர்கிறேன். பேராசிரியர் ஆஷர், பேராசிரியர் கமில்சுவலபில், பேராசிரியர் அலெக்ஸ்சாண்டர் துபியான்ஸ்கி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அயல் நாட்டுத் தமிழறிஞர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாகத் திகழ்ந்தவர்கள், /திகழ்பவர்கள்.

இவர்கள் அனைவரும் இந்த மாரிமுத்து, நந்தன் செயலால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் புறக்கணித்தவர்கள். இவர்களுள் தற்போது வாழும் பிறநாட்டு அறிஞர்கள் 2019-முதல் முனைவர் மாரிமுத்துவின் வெளியேற்றத்திற்குப் பின் இந்த அமைப்போடு தங்களுக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

நொபுரு கராஷிமா குறிப்பிட்டுள்ள புதிய IATR 2019-இல் மிகுந்த ஆற்றலுடனும், தொலை நோக்குடனும் புத்துயிர் பெற்று இப்போது பிறந்துள்ளது. வளரும் இந்த மழலையை இந்த மனிதர்கள் வாழ வழி விட்டு சற்றே விலகிக்கொள்ளட்டும்.

திரு.நெடுமாறன் அவர்கள் யுனெஸ்கோ நிறுவனத்தைப் பத்திரப்பதிவு செய்யும் அலுவலகமாக எண்ணிக் கொண்டிருக்கிறார் போலும். யுனெஸ்கோவின் பல்வேறு உயர்நிலை ஆய்வுக்குழுக்களில் நான் பலகாலம் பணியாற்றி உள்ளேன். தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது தொடர்பாக உலகளாவிய தகுதிப்பாடுகளை யுனெஸ்கோ மூலம் பெற்றுத் தந்துள்ளேன். இவர் IATR-ன் பதிவு பற்றிக் கவலைப்பட வேண்டாம். அது முறைப்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதில் அவருக்கு ஐயம் வேண்டாம். இது தனிநாயகம் அடிகளாரின் கனவை நனவாக்குவதில் அனைவரையும் முந்தி நிற்கும் என்பது உறுதி.

தனிநாயகம் அடிகள் தனிக்கவனம் செலுத்திக் கொணர்ந்த தமிழாய்வு (Tamil Culture) ஆய்விதழை, இணையத்தில் ஆய்வு மின்னிதழாக புதுப்பித்து வெளியிடுவதிலும், செயல் படுத்தப்படாமல் சிதைந்து போன பல நல்ல திட்டங்களை உடனடியாகச் செயல் படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் திட்டங்கள் பல தீட்டிச் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.