18-ம் நூற்றாண்டு முதலே ஐரோப்பியர்களின் கவனமும் நடவடிக்கைகளும் கல்கத்தா பற்றியே இருந்ததால் தமிழ்நாடு பற்றிய உணர்வு அவர்களுக்குத் தோன்றவே இல்லை. மேலும் தனித்த பெருமை கொண்டது மட்டு மல்லாமல் சமஸ்கிருதத்தையும் சிறப்பித்த தமிழ்மொழி, ஆரிய-திராவிட நாகரிகங்களின் இணைப்புப் பாலமாக இருந்ததனை அறியாமல் இந்தி, வங்காளம், பஞ்சாபி, மராத்தி போன்ற மாகாண மொழிகளுள் ஒன்று மட்டுமே என்று தான் பிறநாட்டு மொழி ஆராய்ச்சியாளர் தவறாகக் கருதிக் கொண்டிருந்தனர்.
உலக நாடுகளில் உள்ள அனைத்து அறிஞர்களும் ஒன்று கூட வேண்டும் என்ற நோக்கில் கீழை நாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்கள் பலரும் இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை கூடி புதிய ஆய்வுகள் பற்றிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வமைப்பு கீழை நாட்டாய்வாளர்களின் பன்னாட்டு ஒன்றியம் என்ற பெயரில் நடைபெற்று வந்தது. இதிலும் தமிழ்மொழி பற்றிய ஆய்வு மிகக் குறைவாகவே இடம்பெற்றது.
இத்தகு குறைபாடுகளைப் போக்கி தமிழ்மொழிக்கு உலகளாவிய அளவில் உலகக் கவனிப்பை உருவாக்க வேண்டுமென்று தமிழ் அறிஞர்கள் முனைந்தனர். இதனை ஏற்று நடத்த ஓர் அமைப்பு தேவையென்பதை அவர்கள் உணர்ந்தனர். இதன் விளைவாக 7.1.1964-ல் புதுடெல்லியில் கீழ்த் திசையறிஞர்களின் மாநாடு கூடியபோது தவத்திரு தனிநாயகம் அடிகளார் "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்' என்ற ஒன்றினை திருவாளர்கள் ஏ.சுப்பையா, பிலியோசர், பர்ரோ, எமனோ, கூப்பர், சுவலெபிஸ் போன்றோர் உதவியுடன் கீழ்க்காணும் நோக்கங்களுடன் தொடங்கினார்.
உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.
உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவுவதும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை "உலகத் தமிழ் மாநாடு' நடத்த இம்மன்றம் முடிவு செய்து, மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்தது. இம்மன்றத்தின் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பெற்றது. அதை அடுத்து, கோலாலம்பூரில் மூன்று மாநாடுகளும், சென்னை, பாரீசு, ஜாஃப்னா, மதுரை மரூசியசு, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் என ஒன்பது மாநாடுகள் நடத்தப்பட்டன.
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய காலந்தொட்டு 2016 வரை 52 ஆண்டுகளில் திட்டப்படி 26 மாநாடுகள் நடந்திருக்க வேண்டியதற்குப் பதிலாக கீழ்க்காணும் காரணங்களால் 9 மாநாடுகள் மட்டுமே நடைபெற்றன.
இந்த தொய்விலிருந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை மீட்டெடுக்க இம்மன்றம் பதிவு செய்யப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. புத்துணர்வோடு செயற்பாடுகள் தொடங்கியுள்ளன.