உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.
உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை "உலகத் தமிழ் மாநாடு' நடத்த இம்மன்றம் முடிவு செய்து, மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்து வருகின்றது. இம்மன்றத்தின் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பெற்றது. அதன் பிறகு நடைப்பெற்ற மாநாடுகளின் விவரங்கள் பற்றி 'மாநாடுகள்' என்ற இணைப்பில் காண்க.